dharapuram

You are here: Home // Dharapuram, News // தொழிலதிபர் கடத்தல் வழக்கு: துப்பாக்கியுடன் மூவர் கைது

தொழிலதிபர் கடத்தல் வழக்கு: துப்பாக்கியுடன் மூவர் கைது

தாராபுரம்: தாராபுரத்தில் தொழிலதிபரை பணம் கேட்டு கடத்திய, நான்கு பேரில், மூவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர். இரட்டைக் குழல் துப்பாக்கி இரண்டு, ஒரு “லேன்சர்’ கார், ஒரு பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தாராபுரம், பொள்ளாச்சி ரோடு ஆர்.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், “ஆர்.கே.எஸ்.’ என்ற பெயரில், டி.வி.எஸ்., நிறுவனங்களின் பைக்குகள் விற்பனை மையங்களை தாராபுரம் மற்றும் காங்கேயத்தில் நடத்தி வருகிறார். இவரது மகன் கோகுல், 29, நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.செப்., 28ல், தாராபுரத்திலிருந்து, காங்கேயத்துக்கு காரில் சென்றார். ஊதியூர் அருகே, நத்தக்காட்டுப்புதூர், வளையகாரத் தோட்டத்தில் அருகே, அடையாளம் தெரியாத நபர்களால் கோகுல் கடத்தப்பட்டார்.திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அமித்குமார் சிங் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களுக்கு தகவல் கொடுத்து, மொபைல் ஃபோன் பேச்சை கண்காணித்தனர். நான்கு நாட்களாக போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், காங்கேயம் – கரூர் மெயின் ரோடு, காடையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த, தாராபுரம், கண்ணன் நகரைச் சேர்ந்த ராஜாராம், 30, பெஸ்ட் காட்டன் மில் பகுதியைச் சேர்ந்த பிரதீப், 24, குணசேகரன் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர்.இவர்களில், ராஜாராம், தாராபுரத்தை சேர்ந்த அழகு நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர். தீவிர விசாரணையில், தாராபுரம் – பொள்ளாச்சி ரோட்டிலுள்ள, பஞ்சப்பட்டி கிராமத்தில் உள்ள பண்ணைக் கட்டிடத்தில் கோகுலை அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

அங்கு சென்ற போலீஸார், கோகுலை மீட்டனர்.அக்கட்டிடத்தில் போலீஸார் ஆய்வு செய்ததில், இரட்டைக் குழல் துப்பாக்கிகள் இரண்டு, ஒரு, “லேன்சர்’ கார், ஒரு பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள பாஸ்கர் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்த மூவரையும், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாதிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Leave a Reply

Copyright © 2010 - 2011 Dharapuram Info. All rights reserved.
In collobration with Oddanchatram.in.